தேர்தல் கூட்டணி

தேர்தல் கூட்டணி 

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும், ஏதோ ஒரு கருத்தில் ஒன்றி, கூட்டணி அமைத்து, மக்களிடம் சென்று, வாக்குகளை கேட்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

 பெரும்பான்மை ஆளுமை கொண்ட கட்சியுடன், பல்வேறு சிறிய கட்சிகள், அரசியல் பதிவு பெற்ற கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள், சாதி கட்சிகள், அமைப்பு கட்சிகள் போன்ற அனைத்தும், ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு சாதகமான அணுகுமுறை கொண்ட கட்சிகளுடம் ஒன்றிணைந்து, மக்களிடம் ஓட்டு கேட்க செல்கிறார்கள்.

 அரசியல் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, மக்களின் கட்சியாகும்.

 மக்களின் பங்களிப்பு இதில் மிக மிக முக்கியம் என்பதை தேர்தல் ஆணையம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 ஒவ்வொரு கட்சியும், ஏதோ ஒரு தனி மனிதரின் சொத்து போல், அவர்களின் வாரிசுகள் அதன் அனைத்து அதிகாரங்களையும், தன் வயப்படுத்திக் கொண்டு செயல்படுவதை பார்த்து வருகிறோம்.

 கட்சிக்காக குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தேர்தல் வைத்து, அந்த கட்சி உறுப்பினர்களால், அதற்கான தலைவர் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 ஆனால், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பெயர்களை, அந்த கூட்டத்தில் தெரியப்படுத்தி, எல்லோரிடமும் கையெழுத்து வாங்கப்படுவது தான் இன்றைய நடைமுறை செய்தியாக இருக்கிறது.

 இதனை தேர்தல் ஆணையம் முக்கிய பணியாக எடுத்துக்கொண்டு, தேர்தல் ஆணையமே, ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும், அதன் கட்சி பொறுப்பாளர்களையும் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, ஏதோ ஒரு கொள்கையில் உடன்பட்டு பிற கட்சிகளுடன் தேர்தலை ஒன்றாக சந்திக்கின்றன.

 தேர்தல் முடிவுகள் தெரிந்த உடனே, அந்த கூட்டணி கட்சிகள் எதிர் எதிர் துருவங்களாக செயல்பட ஆரம்பிக்கின்றன.

 
கூட்டணி கட்சிகளாக, ஒன்றாக மக்களை சந்தித்ததன் காரணமாக, அவர்களை நம்பி வாக்களித்த வாக்காளர்களை புறக்கணித்துவிட்டு, தங்களின் சுய லாபத்திற்காக, கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிரெதிர் துருவத்தில் பயணிப்பது, மக்களின் வாக்கை புறந்தள்ளுவது போன்றதாகும்.

 இந்த நிலை ஏற்படும் போது, தேர்தல் ஆணையம் தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணியை விட்டு மாறுபடும் கட்சியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அவர்களை செல்லாக் காசாக்கி செயல்பட விடாமல் செய்ய வேண்டும்.இன்றைய சூழலில், தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணிகளில் இது முதன்மையான பணியாகும்.

 அண்மையில் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கக் கூடியதாக அமைந்தது. முதன்மையாக, திமுக கூட்டணியில் சில பல கட்சிகளும், ஆஇஅதிமுக கூட்டணியுடன் சில பல கூட்டணிகளும் மக்களை சந்தித்தனர்.

 அதன் அடிப்படையில் வாக்குகளை பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இந்த சூழலில் ஆஇஅதிமுகவை சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களை தேர்ந்தெடுத்த மக்களை கூட சென்று சந்திக்காமல், தாங்கள் எந்த கட்சியில் நின்று வெற்றி பெற்றோமோ, அந்தக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு மல்லாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலைப்பாட்டில், எந்த காரணத்தையும் கூறாமல், தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

 அதற்கு சட்டப்பேரவை தலைவர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யும் போது அதற்கான காரணத்தை கூறத் தேவையில்லை என்று வக்காலத்து வாங்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தாங்கள் சார்ந்த கட்ச்சியின் அங்கீகாரம் பெற்ற தலைவரின் ஒப்புதல் கையொப்பத்துடன், அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 அங்கு அந்த தனிப்பட்ட நபர் எப்படிப்பட்டவர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் அவருக்கான தேர்தல் சின்னம், முக்கிய பங்கு வைக்கிறது.

 அது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், அவர் தனிப்பட்ட மனிதர் அல்ல. அந்த ஒட்டுமொத்த தொகுதி மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட கூடியவராக மாறிவிடுகிறார்.

 எனவே அவரின் செயல்பாடுகள் மக்களின் மனநிலைக்கு எதிராக ஒருபோதும் இருக்கக் கூடாது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தாங்கள் ஒன்றாக இணைந்து மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு, எதிர் அணியினருடன் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலையை இப்போது பார்த்து வருகிறோம்.

 தேர்தலில் நின்ற போது திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்தார்கள். அந்த மக்களின் வாக்கிற்கு எதிராக, வேறு ஒரு கூட்டணி கட்சி உடன் இணைந்து செயல்படுவதை தேர்தல் ஆணையம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மேலும் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மக்களை எந்த நோக்கத்திற்காக, எந்த கூட்டணியுடன் யார் யாருடன் இருந்தார்களோ, அவர்கள் வேறு ஒரு கூட்டணியில் இடம் பெறக் கூடாது என்ற அடிப்படை தகவல்களை, தேர்தல் ஆணையம் தெளிவாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்க வேண்டும்.

 அதனை நடைமுறைப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளில் தரம் தாழ்ந்த அரசியலை, தடுத்து நிறுத்த வேண்டும்.

 ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்தல் களம் காண வேட்பு மனு தாக்கல் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

 தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். பொய்யான தகவல்கள் கொடுக்கக் கூடாது. அதுபோல அவர்கள் எந்த கூட்டணி கட்சியில் தேர்தலை சந்திக்க விருப்பப்படுகிறார்களோ, அந்த கூட்டணி கட்சிக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் செயல்பட அனுமதிக்க கூடாது.

ஒரு கட்சியில் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் மூலம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த சட்டப்பேரவை உறுப்பினர் அந்த கட்சிக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் என்ற நிலையை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

 ஒரு கட்சியின் கொள்கைக்கு உட்பட்டு, அந்த கட்சி வேட்பாளராக தேர்தலில் களம் கண்டுவிட்டு, வெற்றி பெற்ற பிறகு, எக்காரணம் கொண்டும் அந்த கட்சிக்கு எதிராக செயல்பட முடியாத நிலையை தேர்தல் ஆணையம் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

 அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆஇஅதிமுக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு குழுவாக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது, அந்த உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

 இதனை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இனிமேல் அது போன்ற நிகழ்வுகள் நடவாமல் இருக்கும் வண்ணம் தனது செயல்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

 அரசியல் கட்சி என்பது ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுகைக்கு உட்பட்ட அமைப்பு அல்ல என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

 எப்படி வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம் என்ற வரையறையை, இப்படித்தான் தேர்தல் ஆணையம் மூலம் நடத்த வேண்டும் என்ற வழிமுறையை, தேர்தல் ஆணையராக இருந்த டிஎன் சேசன் அவர்கள் வழிகாட்டி சென்று இருக்கிறார்.

 இதன் மூலம் பெருமளவிலான முறைகேடுகள் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளால் செய்ய முடியாமல் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன.

 அதுபோல ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் கோட்பாடுகளும் அந்த அரசியல் கட்சியின் தலைவர்களால் பின்பற்றப்பட வேண்டும், இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற புரிதலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

 ஒரு தேர்தலை நடத்தி அதில் பெருவாரியான வாக்குகள் பெற்றவர்களுக்கு வெற்றிச் சான்றிதழை அளிப்பது மட்டும் தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல.

 தேர்தல் அறிவிப்பு தொடங்கி, தேர்தல் நடத்துதல், தேர்தல் முடிவுகளை அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கட்சி தாவலை தடுத்தல், தேர்தல் கூட்டணியில் இருந்தவர்கள் வேறு கூட்டணிக்கு செல்ல செல்லாமல் இருத்தல், வேறொரு கூட்டணியில் அங்கம் வகிப்பதை தடுத்தல் போன்ற அனைத்து பணிகளையும், செயல்பாடுகளையும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 அப்போதுதான் அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகும். இல்லையேல் அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரிகளாய் மாறி அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி ஜனநாயகம் படுதோல்வி அடைந்து விடும் என்பதை உணர வேண்டும்.

 தேர்தல் ஆணையம் மட்டுமே இதனை செய்ய வேண்டும் என்று மக்களும் அமைதியாக இருப்பது அரசியல்வாதிகளை மேலும் மேலும் தவறுகள் செய்யுங்கள் என்று அனுமதிப்பது போன்ற செயலாக அமைந்து விடும்.

 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற புரிதலை மக்கள் உணர வேண்டும். மக்கள் நலனுக்காக தான் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவுடன் அவர்களை கேள்வி கேட்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.

 ஒன்றுபட்ட மக்களால் எதையும் சாதிக்க முடியும், அந்த மக்களின் கேள்விகளுக்கு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் அந்த விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டும்.


You may also like

No comments: