மாண்புமிகு மக்கள்
/
0 Comments
மாண்புமிகு மக்கள்
தமிழக சட்டப்பேரவைக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பல்வேறு பாடங்களை தந்திருக்கிறது.
குறிப்பாக 60 ஆண்டு காலமாக ஆண்டு வந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று தலைமை வேண்டும் என்ற குரல் மாண்புமிகு மக்கள் வாயிலாக வளமாக ஒலித்திருக்கிறது.
இதன் எதிரொளியாக புதியதாக அரசியல் களத்தில் இறங்கியவர்கள் பெருவாரியான தொகுதிகளை வென்றிருக்கிறார்கள்.
இந்த முடிவு ஏதோ மாயாஜாலத்தாலோ மந்திரத்தாலோ நிகழவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் விரும்பும் ஆட்சியை ஏற்கனவே ஆண்ட கட்சிகள் தருவதில் இருந்து தடம் புரண்டு சென்றுவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் புதியதாக ஒருவரை ஆட்சிக்கட்டியில் அமர வைக்க நினைத்தவர்களும், முழுமையான பலம் பொருந்திய ஆட்சியாக அமைய விடாமல் 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொடுத்து ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக மாண்புமிகு மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த முடிவுகள் சாமானிய மக்களால் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில், மெத்த படித்த மேதாவிகளால் அறிந்து கொள்ள முடியாத நிலை ஆகிவிட்டது. அதன் எதிரொள்ளியாகத்தான் கருத்துக்கணிப்புகளும் இதனை கண்டறிய இயலாமல் போனது.
பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களாக கொண்டுள்ள அந்த புதிய அரசியல் கட்சிக்கு கூட இந்த வெற்றி புதிராகத்தான் இருந்திருக்கும்.
ஒன்று 234 தொகுதிகளிலும் வெல்வோம் அல்லது பத்து இருபது தொகுதிகளிலாவது நாம் வெற்றி பெறுவோம் என்று எண்ணி இருக்கலாம். ஆனால் கள நிலவரம் மக்களின் மனநிலை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சிகளை அப்புறப்படுத்தி விட்டது.
இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன. மாண்புமிகு மக்கள் ஆழமாக அதே சமயத்தில் அழுத்தமான கருத்துக்களை தங்களின் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சாமானிய மக்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
இவர்களுக்கு என்ன தெரியும் நூறு ரூபாயோ 500 ரூபாயோ ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அடிமை போல் நம் பின்னால் வருவான் என்ற ஏலன பேச்சை எடுத்து எறிந்து இருக்கிறார்கள்.
எங்களுக்கும் சக்தி உள்ளது அது நேரு அவர்கள் தந்த ஓட்டுரிமை எனும் மகத்தான சக்தி அதன் மூலம் எங்கள் வலிமையை காட்டுவோம் என்று மனதுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் மௌனமாக சொல்லியிருக்கிறார்கள்.
முதலாவதாக 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை புதிய கட்சிக்கு தந்த மாண்புமிகு மக்கள் அந்தக் கட்சியை மட்டும் அல்லாமல் மற்ற கட்சிகளையும் சுய பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள்.
பொதுவாக பிள்ளையார் கோயிலில் வேண்டுதலுக்காக 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வார்கள் பக்தர்கள். ஆனால், இந்த புதிய கட்சிக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்ததாலோ என்னவோ, தினம் தினம் அவர்களும் திண்டாடுகிறார்கள். அவர்களை நம்பிய மக்களும் புரியாமல் நிற்கிறார்கள். மற்ற கட்சிகளின் தலையும் உடைந்து கொண்டிருக்கிறது.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் முடியாமல் முட்டி மோதி கொண்டிருக்கிறார்கள்.
எங்கோ ஒரு மூலையில் இருந்த எளிய வாழ்க்கை வாழ்ந்த அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அவரை மாண்புமிகு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது இந்த புதிய கட்சி.
அந்த அளவிற்கு மக்களின் மனதில் பதிந்த அந்த கட்சி மாற்றுக் கட்சியினரை மடக்கிப் பிடிப்பதில் தங்களுக்கு பெருமை என்று எண்ணி சிறுமையில் சிக்கிக் கொண்டு வருவது சரியான பாதையல்ல.
இரண்டாவது, மாற்றுக் கட்சியில் ஒருவர் இருந்தால் அவர் குற்றவாளி ஊழல் செய்பவர். அவரே தமது கட்சியில் சேர்ந்தவுடன் நிரபராதியாகவும் நேர்மையானவராகவும் சித்தரிக்கப்படும் போக்கு, இந்த புதிய கட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பது, புற்றுநோய் போல தம்மை அழித்துவிடும் என்ற அறியாமை இல்லாத போக்கையே வெளிப்படுத்துகிறது.
மூன்றாவதாக, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர், 21 நாட்களே நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்.
இவர்களை நம்பி, இவர்கள் சார்ந்த கூட்டணியை நம்பி, இவர்களை நிறுத்திய கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் மக்களின் நம்பிக்கையை, தங்களின் சுய இலாபத்திற்காக புறந்தள்ளி இருக்கிறார்கள்.
நான்காவது, ஒரு அணியாக தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகள் தோல்வியை கண்டவுடன், எதிர் அணியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அங்கம் வகிக்கும் அவல நிலை தொடர்வது நல்லதல்ல.
இவர்களை நம்பி இவர்களுக்கு வாக்களித்த மக்கள், இவர்கள் எதை சொல்லி மக்கள் முன் நின்றார்களோ, அதை நம்பிதான் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.
அதற்கு மாறாக வெற்றி பெற்றவுடன் அந்தக் கூட்டணியை புறந்தள்ளிவிட்டு வேறு ஒரு கூட்டணியில் இணைவது சட்டத்திற்கு புறம்பானது.
அந்த மக்களின் நம்பிக்கையை நீர்த்துப்போக செய்யும் தவறான செயல் என்பதை உணர மறுக்கிறார்கள்.
ஐந்தாவது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதும், தேர்தலை வெற்றி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது மட்டுமே வேலை என்று இல்லாமல், அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் தான் சார்ந்த கட்சியில் இருந்து வேற்றுக்கட்சிக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அதேபோல், ஒரு அணியாக தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு, வேறு அணிக்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.
இதற்கான சட்டத்தை சட்ட முன்னெடுப்பை உருவாக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல் ஒரு கட்சி என்னென்ன வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்ததோ, அதனை செய்கின்றதா? செய்து வருகிறதா? என்பதை கணித்து அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைக்கும் தேர்தல் ஆணையம் செல்ல வேண்டும்.
இதன் மூலம் சாத்தியம் இல்லாத, மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் மலிவான வாக்குறுதிகளை கொடுக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
இறுதியாக, மக்கள் பெரிதும் அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களை ஆட்டு மந்தைகள் போல் அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து வருவதையும், அவர்களுக்கு 500 ரூபாய் ஒரு பிரியாணி என்ற நிலையில் அவர்களை பார்ப்பதையும் இந்த தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தெளிவான செய்தியை மாண்புமிகு மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யக்கூடிய உன்னத செயல் என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக அந்த செயல் வெளிப்படுகிறது.
இனிமேலும் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது அந்த அரசியல்வாதிகளுக்குத்தான் பொருந்தும் என்பதை ஆணித்தரமாக இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன.
புதியதாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள கட்சி அரசியல் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முயல வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அடுத்த கட்சி நிர்வாகிகளையும், அந்த தலைவர்களையும், தன் பக்கம் இழுக்கும் கேவலமான செயலையும் தவிர்க்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அரசியலிலும் அரசாங்கத்திலும் ஊழல் தான் மிகப்பெரிய அழிவு சக்தியாக மக்கள் முன் நிற்கிறது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், இன்றைய முதல்வர் அவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில், ஊழலே இல்லாத உண்மையான ஆட்சியை கொடுப்பேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.
அந்த ஒன்றை அவரும், அவரை சார்ந்த அமைச்சர் பெருமக்களும், அவர் கட்சி பிரமுகர்களும் உறுதி செய்வார்களானால், அதுவே இந்த மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்