கைப்பேசி... வாகனம்... சாலை விபத்து...!?
இன்றைய வலைதள கணினி யுகத்தில் கைபேசிக்கும், வாகனத்திற்கும், சாலை விபத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
அதிவேக சூழலில், இன்றைய வாழ்க்கை முறை ஓடிக்கொண்டிருப்பதால், கைபேசியையும், வாகனத்தையும் தவிர்க்க முடியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சாலை கட்டமைப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிநவீன கட்டுமான பொறியியல் சிறப்புடன், வாகன போக்குவரத்திற்கு எளிதில் எல்லோருக்கும் வாய்ந்திருக்கிறது.
இத்தகைய சூழலில், சிறுவர் முதல் பெரியவர் வரை, வசதி வாய்ப்பு வரையறை இல்லாமல், எல்லோரும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய வாகனங்களை, சிறார்கள் பயன்படுத்துவதை கண்டிக்காத, தடுக்காத, பெற்றோர்கள் பெருகிவிட்டார்கள்.
சாலைப் போக்குவரத்து விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இருந்த போதிலும், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாகனங்களை ஓட்டலாம் என்ற நிலை பெறுவாரியான இடங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் சட்டப்படி தண்டிக்கப்படலாம். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கலாம். இப்படி எல்லாவற்றிற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்ட வழிமுறைகள் முறையாக நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா? என்பதை சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இன்றைய நிலையில் சாலையில் கைபேசி பேசாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
நூற்றுக்கு 99 பேர் கைபேசியை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டே, பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணத்தின் போதே, பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள், அதற்கு ஏற்ப செயல்படுகிறார்கள்.
சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, கைபேசியின் செய்திகளின் தன்மையை பொறுத்து, வாகன ஓட்டிகளின் கவனம், அவர்களை அறியாமல் அவர்களிடம் இருந்து சென்று விடுகிறது.
சாலையில் எதிர்வரும் வாகனங்களின் போக்கையோ, இவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களின் வருகையையோ, இவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத நிலையில், இவர்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள்.
சாலையில் திடீரென நிறுத்துவதும், சைகை செய்யாமல், இடது வலது பக்கங்களில் திரும்புவதும் சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. இதனால், எதிரில் வருபவர்களும், பின்னால் வருபவர்களும், நிலைகுலைந்து செய்வதறியாது, விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
வாகனத்தை இயக்கும் போது, கைபேசியில் அவசர செய்தியை அடுத்தவருடன் பேச வேண்டிய நிலை ஏற்படும் போது, வாகனத்தை சாலையின் ஓரமாக பாதுகாப்பான முறையில் நிறுத்திய பிறகு பேசலாம், என்ற மனநிலை ஒருவருக்கும் இல்லாத சூழலில், இன்றைய சாலை பயணம், விபத்து பயணமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இருசக்கர வாகனத்தை சாலையில் பயன்படுத்த வேண்டும் என்றால், ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன், வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தலைக்கவசத்தில் பெல்ட் போட்டிருக்க வேண்டும்.
நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள், அவசியம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இவைகள் புதிய வழிமுறைகள் அல்ல. பயணிகளை பாதுகாக்கும் அணிகலன்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து அதன்படி நடந்திட வேண்டும்.
வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஒலியெழுப்பும் ஒலிப்பான்களை சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சாலையில் பயணிப்போரை அதிர வைக்கும் அளவிற்கு, ஒலிப்பான்களை ஒலித்துக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களை பார்க்க முடிகிறது.
மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள் இருக்கும் இடங்களில் அதிக வேகங்களில் செல்லக்கூடாது. அத்தகைய இடங்களில் தேவையற்ற சூழலில், ஒளிப்பான்களை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்த போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சட்டத்தை செயல்படுத்தும் போக்குவரத்து காவல்துறை, எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், சாலை விதி மீறல்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில், சிறிய அளவிலான சாலை விதி மீறல்களுக்கும், அதற்கேற்ப தண்டனை அப்போதே வழங்கப்படும். எந்த சூழலிலும், சாலையில் நடக்கும் விதி மீறல்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
ஆனால், நம் தமிழகத்தில் அத்தகைய கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கூடிய நிலையில் காவல்துறை செயல்படவில்லை. பல்வேறு நிலைகளில், நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், காவல்துறையால் செயல்படுத்த முடியாத கையறு நிலையை காண முடிகிறது.
மக்களாக மாறுவார்கள், சாலை விதிகளை கடைப்பிடிப்பார்கள் என்ற சூழல் தமிழகத்தில் தென்படவில்லை. சட்டத்தின் மூலம் மட்டுமே, அதனை கட்டுப்படுத்த முடியும். எனவே, காவல்துறை எவ்வித தளர்வும் இல்லாமல், சாலையில் நடக்கும் விதி மிலர் மீறல்களை, சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து தண்டிக்க முன்வர வேண்டும்.
வெறுமனே சட்டத்தை இயற்றினால் மட்டும் பயனளிக்காது. அந்த சட்ட விதிமுறைகளை தேவையான இடங்களில் பயன்படுத்தினால் தான் அந்த சட்டத்திற்கு மதிப்பு உண்டு.
சாலை விபத்துக்கள், வாகனங்கள் வேறு வாகனங்களுடன் மோதும் போது ஏற்படுகிறது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது மோதும் போது ஏற்படுகிறது. வாகனங்களை சாலை விதிகளை மீறி இயக்கும் போதும் விபத்து ஏற்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக, சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் உயிர்ப்பலி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும், இத்தகைய சாலை விபத்து செய்திகளை பார்த்த போதிலும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
சட்டத்தை மதித்து அதன் வழிமுறைகளை கடைப்பிடித்து வாழும் நடைமுறை, இன்றைய தலைமுறையிடம் குறைந்து வருகிறது.
பொதுவெளியில் வரும்போது நமக்குள்ள உரிமைகள், பிறர்க்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அதிக வேகத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை, தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
அதிவேகப் பயணம் பெருமைக்குரியதல்ல, என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே வாகனங்களை பயன்படுத்தும் கலையை கற்றுத் தர வேண்டும்.
இன்றைய சாலை விபத்துகளின் கணிப்புகள், 40 விழுக்காட்டிற்கு மேல் இளைஞர்கள் சாலை விபத்துகளில் பலியாகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
சாலை விபத்தில் இறப்பவர் தனிநபர் அல்ல. அவரை சார்ந்து அவர் குடும்பம் இருக்கிறது. அவரின் எதிர்கால வளர்ச்சி இருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற புரிதலை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வாகனங்களிலும் அதன்அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் அதை கொண்டு வர வேண்டும்.
சாலையில் வேண்டாம் சாகச பயணம் என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு நாளும் பொழுதும் நினைவு கூற வேண்டும்.
ரத்த தானம் செய்வது, அவசிய தேவைக்கு மருத்துவமனையில் இருப்பவரின் உயிரை காப்பாற்றும்.ஆனால் அனாவசிய சாலை விபத்தில், நம் ரத்தத்தை சாலையில் சிந்தும் போது, நம் உயிரைப் பறிக்கும்.
சட்டத்தை மதித்து நடக்கும் இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.
தனிமனித கட்டுப்பாடு, சட்டத்தை மதித்து செயல்படும் மனப்பக்குவம், ஒருவரை மதித்து ஒருவர் செயல்படும் மனநிலை, இப்படி உயர்வான எண்ணங்களை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
மனித உயிர் விலைமதிப்பற்றது. அதுபோல் ஒவ்வொரு நாளும், அரியதொரு வாய்ப்பை நமக்கு கொடுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபத்தில்லா பயணம் சாத்தியமே, அதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் போது. அந்த நாள் வரும்போது, சாலையில் விபத்துக்கள் குறைவதுடன் மரணத்திற்கு மரணம் வரும்.
பொறிஞர் ப நரசிம்மன், தருமபுரி