ஐந்தறிவும் ஆறறிவும்
/
0 Comments
உயிர்களின் அறிவு உருவங்களுக்கு உருவம் வேறுபட்டும் மாறுபட்டும் அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும்.
நமது கை விரல்கள், ஒரே அளவில் இருக்குமானால், நாம் எப்படி செயல்படுவோம்? எவ்வாறு கையாள்வோம்? என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால், விரல்களின் வேறுபட்ட அளவுகளினால் ஏற்படும் பயன் புலப்படும்.
அது போலத்தான், ஒவ்வொரு உயிரினங்களும், ஒவ்வொரு தன்மை கொண்டனவாக, உலகில் உலவி கொண்டிருக்கின்றன.
தனக்கு நிகர் தான் தான், என்பதில் ஒவ்வொன்றும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
எறும்பு ஊர்ந்து செல்கிறது.ஆமை நகர்ந்து செல்கிறது. மீன்கள் நீந்தி செல்கின்றன ஆடுகள் நடந்து செல்கின்றன.
முயல்கள் ஓடி செல்கின்றன. சிங்கமும் புலியும் தன் வலிமையை காட்டி செல்கின்றன. குரங்குகள் தாவித்தாவி செல்கின்றன.
இப்படி ஐந்தறிவு கொண்ட உயிர் வாழினங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக பயணப்பட்டு, தன் வாழ்நாளை செலவிடுகின்றன.
தங்களுக்குள் எவ்வித போட்டியோ, பொறாமையோ, வஞ்சமும், வன்முறையோ கொள்வதில்லை.
காகம் பறந்து சென்றாலும், தனக்கு ஒரு இறை கிடைக்கும் போது, தன் இனத்தை கூவிக்கூவி அழைத்து, ஒன்று கூடி, ஒன்றுபட்டு உண்டு மகிழ்கின்றன.
எந்த உயிரினமும், தன் தேவைக்கு அதிகமான எந்த பொருளையும், சேர்த்து வைக்கவும், சேர்த்துக் கொள்ளவும் நினைப்பதில்லை.
அன்றாட தேவை அறிந்து, அதற்கு ஏற்ப உண்டு மகிழ்ந்து, அதனதன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
எல்லையற்ற வாழ்வு, எல்லையில்லா மகிழ்ச்சியில், எல்லா உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தனக்கு ஆறறிவு உள்ளது எனக்கூறும் மனிதன், இவற்றின் எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்றுவதே, என் வேலையென்று, தன் வாழ்நாளை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
தான் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தான் மட்டுமே செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். தனக்கு மட்டும் வேண்டிய எல்லாம் கிடைக்க வேண்டும்.
தனக்கு கிடைத்த எதுவும் பிறருக்கு கிடைக்கக் கூடாது. தன்னை மட்டுமே ஊரார் புகழ வேண்டும். தனக்கு மட்டுமே எல்லா இடங்களிலும் முதல் மரியாதை தர வேண்டும், என இன்னும் ஏராளமாய் தனக்கு மட்டுமே வேண்டும் என்று வாழ்ந்து வருகிறான் மனிதன்.
இப்படி தன்னைப் பெருக்கில் வாழும் மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்பம் மட்டுமே வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கை இன்பமயமாக இருக்காது.
எல்லா நாட்களின் இருபத்து நான்கு மணி நேரமும், பகல் பொழுதாக இருக்குமானால், உயிரினங்களின் நிலை என்னவாகும்?.
பகல் பாதி, இரவு பாதி என்பதனால் தான், ஒவ்வொரு நாளின் வேலை நேரம் போக, ஓய்வுக்கான நேரம் என உடலை பாதுகாத்துக் கொள்கிறோம்.
உயர்ந்த மலை பிரதேசம் இருக்கும் இந்த பூமியில் தான், தாழ்ந்த பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன.
நல்லவர்கள் வாழும் இந்த பூமியில் தான், கெட்டவர்களும் வாழ்கிறார்கள். எண்ணங்களை எடுத்துக் கொண்டால், நல்ல எண்ணம் கொண்டு இருப்பதும் உண்டு.
தீய எண்ணம் கொண்டோரும் உண்டு. நாம் எந்த எண்ணத்தைக் கொண்டு வாழ்கிறோம், நம் மனதில் எத்தகைய எண்ணங்களை பதித்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் நம் தனித்தன்மை வெளிப்படுகிறது.
மனம் தான் மனிதனை இயக்கும் கருவியாகும் . அந்த மனதின் உள்ளே குழுமியிருக்கும் என்ன குவியல்கள் நன்மை பயக்கும் நல்லெண்ணங்களாக இருக்க வேண்டும்.
நன்மை என்பதும் தீமை என்பதும், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள், மாறுபட்டுக் கொண்டு இருக்கும். வேறுபட்டுக் கொண்டே இருக்கும்.
பொதுவான கோட்பாடாக, நமக்கும் பிறருக்கும், நாம் வாழும் நாட்டிற்கும், எவ்வித கேடும் விளைவிக்காத எந்த ஒரு எண்ணமும், செயலும், நல்லெண்ணமாக எடுத்துக் கொள்ளப்படும்.
அளவுகோல் ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், மாறுபட்ட போதிலும், ஒரு எண்ணத்தினால் அந்த எண்ணத்தின் மூலம் செயல்படும் செயலினால், ஏற்படும் விளைவுகள் தான் நன்மை தீமையை தீர்மானிக்கும்.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொருவரின் வாழ்விட சூழல்கள் தான் அவரை நற்செயல் புரியவும், தீஞ்செயல் புரியவும் தூண்டுகின்றன.
தெரியாமல் செய்யும் தவறுகள் மூலம் திருத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் வழிவகை உண்டு. தெரிந்தே செய்யும் தப்புகளின் பிடியிலிருந்து ஒருவரும், ஒருபோதும் தப்பிவிட முடியாது.
உப்பைத் திண்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். மாற்று வழி கிடையாது. தற்காலிகமாக கிடைக்கும் தற்போதைய வெற்றி என்றும் வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
அதன் மூலம் நிறைய பேருக்கு பலன் கொடுக்கும் செயலைச் செய்ய வேண்டும்.
பாரில் நாம் சிறக்க நம் செயல்பாடு நல்லனவாக இருக்க வேண்டும். நன்மை செய்யும் நல் எண்ணமுடன் வாழ்பவர்கள் நல்ல செயல்களைச் செய்திட வேண்டும்.
அத்தகைய செயல்களை செய்வதற்க்கு நல்ல எண்ணங்களை மனதில் நிரப்ப வேண்டும். அதை தான் ஆன்றோர்கள், ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய், என்று கூறி நமக்கு வழிகாட்டி சென்று இருக்கிறார்கள்.
ஒரு ஊருக்கு செல்ல பல வழி தடங்கள் இருக்கின்றன. எந்த வழித்தடத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் செல்ல இருக்கிற இடத்தை சென்று சேரலாம் என்ற முடிவை, நாம் தான் அறிந்து ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு எனும் வாக்கிற்கு இணங்க, ஒன்றுபட்ட எண்ணத்துடன், ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும்.
பறவைகளுக்கு இல்லை போட்டி பொறாமை எனும் தீய குணங்கள். அவைகளின் அன்றாட தேவைகள் மட்டுமே, அவைகளின் தேவைகளாக எண்ணி வாழ்கின்றன.
ஆனால், ஆறறிவு பெற்றோம், அகிலத்தை ஆள்வோம் என்ற ஆணவப் பெருக்கில் மனிதனின் செயல்பாடுகள் மனிதனை மட்டும் அளிப்பவை அல்ல.
உலகத்தை உருகுலைக்கும் வகையில் தீய எண்ணங்களின் பெருக்கம் அகிலத்தையே அச்சுறுத்துகின்றன என்பதை ஆறறிவு கொண்ட மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டும்.