பெஸ்டி ( நாவல் )நூல் மதிப்புரை
/
2 Comments
நூல் பெயர் :பெஸ்டி ( நாவல் )
நூல் ஆசிரியர் :இரா பாரதிநாதன்
நூல் வெளியீடு :புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை.
பக்கம் 112 விலை ரூ.135/- நூல் வெளியீடு 2025
மனிதர்களில் ஆண் சாதி, பெண் சாதி அவர்களுடன் சேர்ந்து, ஆண்டவன் சாதி என்ற அலி யென்னும் மூன்றாம் பாலினம் இருப்பது நமக்கு தெரியும்.
அது போல, ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை அமைவதையும் அறிந்திருக்கிறோம். அண்மை காலமாக, ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ முடியும் என்ற புதிய நடைமுறையை மேற்கொண்டு வருவதையும் காண்கிறோம்.
அதையும் தாண்டி, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு திருமண உறவில் இணைத்துக் கொள்ளாமல், திருமண தம்பதிகள் போல் வாழ்க்கை முறையை நடத்தி வருபவர்கள் "பெஸ்டி" எனும் புதிய பந்தத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
இதை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாக தெரிந்த போதிலும், அந்த உறவு முறையில் வாழ்பவர்கள், அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதாக உணர முடிகிறது.
இந்த "பெஸ்டி" எனும் உறவு குறித்த உயிரோட்டமான கதாபாத்திரங்களுடன் கூடிய நாவலை நூலாசிரியர் இரா பாரதிநாதன் வடித்துள்ளார்.
பக்கத்துக்கு பக்கம், அத்தியாயத்திற்கு அத்தியாயம், அவர்களின் குடும்ப வாழ்க்கையின் அங்கமாகவே நம்மை அழைத்துச் செல்கிறார்.
ஒரே சாதியை கொண்டவர்களும், ஒரே ஊரை சேர்ந்தவர்களுமான, ராகவனும் வேணியும் சிறுவயதிலிருந்து ஒன்றாக பழகியதால் அது காதலாக மாறிவிடுகிறது.
படித்து வேலை தேடும் பருவத்தில் இருக்கும் இருவரும், தங்கள் காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இல்லை.
அதனால், இந்த கிராமத்தில் இருந்து அருகாமையில் உள்ள சேலம் நகரத்தை அடைந்து, அங்கிருந்து சென்னைக்கு சென்றுவிடலாம் என்ற திட்டத்துடன் இருவரும் அந்த கிராமத்தை விட்டு பயணப்படுகிறார்கள்.
எதிர்பாராத சூழல் காரணமாக, இவர்கள் சேலம் பேருந்து நிலையத்தில் இருப்பதை வேனியின் உறவுக்காரர் கொடுத்த தகவலின் பெயரில், உடனடியாக சேலம் பேருந்து நிலையத்தில் சோதனை இடுகிறார் வேனியின் பெற்றோர்கள்.
இதை வேணியும் ராகவனும் சற்று தூரமாக இருந்து கண்காணிக்கும் போது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு தப்பித்துக் கொள்ளும் நிலையில், ராகவன் ஒரு புறமாகவும், வேணி ஒரு புறமாக தப்பித்து விடுகிறார்கள்.
ராகவன் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் ஓட்டம் பிடித்த போதிலும், வேணியை தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று, கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, நெட்வொர்க் பிரச்சனையினால், தொடர்பு ஏற்படுவதில்லை.
சூழ்நிலை கருதி, ஓட வேண்டிய தூரம் ஓடி, களைத்து போய் சாலையில் சாய்ந்த போது, அந்த வழியாக காரில் வரும் செல்வி, ராகவனை காரில் அழைத்து ஆதரவு கரம் நீட்டி, சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்.
முழு விவரத்தையும் தெரிந்து கொண்ட செல்வி தான் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்து, தான் தங்கி இருக்கும் குடியிருப்பிலேயே தங்கிட வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
இப்படியே இவர்களுக்கு உள்ளான நட்பு, ஆழமான நட்பாக உருமாறுகிறது. எல்லை மாறாத நட்பு, இருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.
இந்த சூழலில் இவர்கள் பணி புரியும் மென்பொருள் நிறுவன வேலை வாய்ப்பு நேர்காணலில் போது, வேணி வந்திருப்பது ராகவனுக்கு தெரிய வருகிறது.
எப்போது வேணியை காண்போமோ என்று இருந்த ராகவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த நிகழ்வு அமைகிறது.
வேணிக்கும் அதே மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திட, செல்வியின் உதவியால், நியமன ஆணை உடனே வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், வேணி அன்றைய இரவு சேலம் பேருந்து நிலையத்தில் தப்பித்து எவ்வாறு சென்னை வந்தார், என்ற விவரம் ராகவனுக்கு தெரிய வருகிறது.
பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் செல்வியின் தலைமையில் ராகவனுக்கும் வேணிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இந்த சூழலில் ராகவன் செல்வியிடம் இதுவரை இருந்த நட்பு வேணியின் உறவால், வேணி மனைவி என்ற முறையில், தவறாக புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
என்னதான் நண்பர்களாக இருந்தாலும், கணவன் மனைவி என்ற உறவுக்கு வந்த பிறகு, ராகவன் செல்வியுடன் இருக்கும் நட்பை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு வேணயின் மனநிலை மாறிவிடுகிறது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்பாடுகள், மூவரையும் முக்கோணமாக மாற்றி விடுகிறது.
இந்த மூன்று கோணமும், ஒரு கோணமாக மாறுகிறதா? அப்படி மாறுவதற்கான சூழல் எப்படி அமைகிறது? என்பதை ஆழமான தனது எழுத்துக்கள் வாயிலாக, இந்த நாவலின் வழியே, நம்மை அழைத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர்.
சிறப்பான கதாபாத்திரங்கள் வழியாக, அவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளை வாசகர்களுக்கு தந்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.