இணையமெனும் சிறை வானில்
/
1 Comments
இணையமெனும் சிறை வானில்
அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று இருந்த நிலை மாறி, இன்றைய இணையதளம் கைபேசி இன்றி கடுகளவு காலமும் நகராது என்ற வாழ்க்கையாக்கி விட்டது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் , உண்ணும் போதும், பேசும் போதும், நடக்கும்போதும், வேலையின் போதும், உறங்கும்போதும் என்ற அனைத்து பொழுதுகளும், கைபேசியின் வழியே கடந்து கொண்டிருக்கிறோம் .
பச்சிளம் குழந்தை முதல், பாட்டன் பாட்டி வரை, எளியோர் முதல் வலியூர் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது கைபேசி எனும் கருவி.
நிற்கவும், நடக்கவும், உட்காரவும், பயணம் செல்லவும், பாதை சொல்லவும், பக்கத்தில் இருப்பவர் இருக்கிறாரா? என்பதை கேட்டு சொல்லவும், கைபேசி உதவியை தவிர்க்க முடியாமல் இணைய உலகில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கு செல்ல வேண்டும்? எதற்கு செல்ல வேண்டும்? எப்படி செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? என்பன போன்ற எல்லாவற்றிற்கும், கைப்பேசி என்னும் கடவுள் கை கொடுக்காமல், ஒருவராலும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது.
அந்த காலத்தில் அழும் குழந்தைகளுக்கு, பால் புட்டி கொடுத்து அழுகையை நிறுத்துவார்கள். இன்று எல்லா வயதினரின் ஏக்கங்களையும், தேவைகளையும் கைப்பேசி எனும் கருவி நிவர்த்தி செய்து வருகிறது.
கைப்பேசி என்பது வெறும் கைபேசியாக இருந்தவரை, தொலைவில் இருந்த நம் உற்றார், உறவினர், நண்பர்களுடன் உணர்வுபூர்வமான நட்பு பாலத்தை ஏற்படுத்தும் நற்கருவியாக இருந்தது.
தொலை தொடர்பு வசதி மேம்பட்டபோது, தொலைதூரத்தில் இருந்தவர்களை நம் கைக்கெட்டும் தூரத்திற்கு கொண்டு வந்து மகிழ்ச்சி கடலில் ஆற்றியது.
அந்த கைபேசியில் 30 க்கும் அதிகமான கருவிகள் குடிப்புக ஆரம்பித்த உடன் நம் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டது.
ஒரு புகைப்படம் எடுக்க, அந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுக்க, பிரிண்ட் எடுத்த புகைப்படத்தை பத்திரப்படுத்தி வைக்க, முந்தைய தலைமுறை எவ்வளவு பாடுபட்டது என்ற தகவல், இன்றைய தலைமுறைக்கு தெரிய வராது.
உட்கார்ந்த இடத்தில் வேண்டுவன எல்லாம், வேண்டும்போது வலியவரும் கால சூழலில் இன்றைய தலைமுறை வாழ்ந்து வருகிறது.
தாமாக சிந்திக்கும் சிந்தை, மெல்ல மெல்ல அருகி வருகிறது. அதன் காரணமாக அனைத்து தேவைகளுக்கும், கைபேசி, கணினி இணையம், செயற்கை நுண்ணறிவு என்பன போன்றவைகளின் உதவிகளை நாட வேண்டிய நிலையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இணையம் மூலம் கிடைக்கும் எல்லா தகவல்களும், நமக்கானவை, சிறப்பானவை, நம்பகமானவை என்று நம்பிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை.
பரிணாம வளர்ச்சியின் மூலம், ஓர் அறிவாக இருந்த உயிரினம், ஆறறிவு கொண்ட மனிதனாக வளர்ந்து, அளப்பரிய சாதனைகளை செய்த செயல்கள் செயலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையும் தவறு என்று எவராலும் கூறிவிட முடியாது. அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே, அடிப்படை வசதிகளை ஆறறிவு கொண்ட மனிதனுக்கு வழங்கிவிடும் என்ற இன்றைய மனப்போக்கு தேவையற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று அன்றே பாடி வைத்தார் பாட்டினிலே. இன்று ஆளாய் வளர்ந்தோம், அறிவாழ் உயர்ந்தோம், ஆனால், மனிதனாய் வாழ மறந்து விட்டோம். மனிதம் என்ற சொல் மங்கி விட்டது. நீர்த்துப் போய்விட்டது.
ஒருவரோடு ஒருவர் மனமாற, உளமாற ஒன்றியிருந்த சூழல் மறைந்து விட்டது. எதையோ தேடி, எதற்கோ அலைந்து, எதுவோ கிடைத்து, எதையும் பயன்படுத்தாமல், எல்லாவற்றையையும் பறிகொடுத்து விட்டு, பரிதாப நிலையில், ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.
இன்பம் என்றால் என்ன? துன்பம் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? ஆசை என்றால் என்ன? என்பன போன்ற எதுவும் விவரம் தெரியாமலும், வித்தியாசம் புரியாமலும், நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும், நடைபணங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
இணையவெளியில் எல்லாம் கிடைக்கிறது, என்று நாம் ஒன்றைத் தேட, நாம் தேடியது கிடைப்பதற்குள் தேவையில்லாத காட்சிகள் தென்பட, என்ன என்று அதனுள் நம் மனது செல்ல, நம் காலமும் நேரமும் கரைந்து கொண்டிருக்கிறது.
கடைசியில், நாம் தேடிய பொருளை கண்டுபிடிக்காமல், தேவையற்ற காட்சிகளை கண்ணுற்று, காலத்தை கரைத்து விட்டு, கரும்புச் சாறு பிழிந்த சக்கை போல் விழி பிதுங்கி, வீதியில் விழுகிறோம்.
இன்றைய அவசர உலகம், ஆசையை தூண்டி விட்டு, அன்பை பறித்துக்கொண்டது. உலகை இணைத்துவிட்டு, உறவுகளை துண்டிக்கும் உன்னத வேலையை செய்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் தேவை பெருகி வருகிறது. பொருள் நுகர்வு, ஆசையும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
கால்நடையாக நடந்த மனிதன், இன்று காற்றை விட வேகமாக சென்றபோதிலும், தன் இலக்கை அடைய முடியாமல், இறுகி நிற்கிறான்.
அன்பு நிறைந்த உள்ளங்கள் எல்லாம், அனல் கக்கும் எரிமலைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
முகம் தெரியாதவர்களிடம், நேரம் போவதே தெரியாமல், என்ன பேசினோம் என்று புரியாமல், சிரித்து சிரித்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
எதிரில் இருப்பவர்களை ஏரெடுத்தும் பாராமல், எள்ளளவும் பேசாமல், எரிந்து விழுகிறார்கள். அன்பால் பிணைக்கப்பட்ட உறவுகள் அருகி வருகிறது.
பெயரளவிலான உறவுகளுடன் கூடிய வாழ்க்கை முறையாகி விட்டது. எதை நோக்கி செல்கிறோம் என்று தெரியாமல், இலக்கே இல்லாத வாழ்க்கையாக வாழ வேண்டிய நிலைக்கு இன்றைய இணைய உலகம் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது.
கைபேசி இல்லாமல், அந்த கைபேசியை காணாமல் கால்கள் நடக்க மறுக்கின்றன. சிறு குழந்தைகளும், உணவு உண்ண மறுக்கின்றன.
இளைஞர்கள், வயதானவர்கள் என்ற வேறுபாடு இன்றி, கைப்பேசியே கதி என்று காலத்தை தள்ளுகிறார்கள்.
சாலையில் நடக்கும் போதும், கைபேசியின் திரை காட்சிகள் தான் இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது.
எதிர்ப்படும் சாலையில், கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளி போல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல், எல்லோரையும் ஆட்டி படைக்கும் கைபேசியின் இணைய திரையெனும், சிறையில் இருந்து எப்போது நம்மை விடுவித்துக் கொள்ளப் போகிறோம்.
மனிதமற்ற மனிதனின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய சூழலுக்கு எப்போது செல்ல போகிறோம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற வாய் மொழிக்கு ஏற்ப அனைத்து பயன்பாடுகளையும், அளவோடு பயன்படுத்தி, வளமோடு வாழும் நற்கலையை பின்பற்றும் நாளும் எந்நாளோ?!.