கலாச்சாரத்தை சீரழிக்கும் சின்னத்திரைகள்
சென்னைத் தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சிகள், மண்டல ஒளிபரப்பாக மாலையில் தொடங்கி இரவு 9 மணிவரை ஒலிப்பரப்பாகும். ஆனால் 1990-களுக்குப் பிறகு பல தனியார் நிறுவனங்கள் தொலைகாட்சி ஒலிபரப்பைத் தொடங்கினார்கள். தொலைகாட்சிப் பெட்டியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சுவைத்து வந்த தமிழர்களுக்கு, இந்தத் தனியார் நிறுவனங்கள் மூலம், நாள் முழுவதும் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பித்தில் ஒரு சில நிறுவனங்கள் இருந்த நிலையில், 2000-க்குப் பிறகு பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஒரு நிகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர்கள் நூற்றுக்கணக்கான வழிகண்வாய்களைப் (சேனல்) பார்ப்பது இயல்பான செய்தியாகிவிட்டது. அறியாமை என்னும் இருளை அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உடைத்தெறிதற்குப் பதில், பேய், பிசாசு, பொய், வஞ்சகம் என பார்ப்போரை இழிநிலைக்குக் கொண்டு செல்லும் கருத்துருக்களை மையமாக வைத்து நெடுந் தொடர்கள் என்ற போர்வையில் மக்களை மூடர்களாக ஆக்கி வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஆக்கும்பொழுது அதனைப் பார்ப்பவர்கள் பயனுற வடிவமைக்க வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே, கிண்டல் கேலியுடன் இருக்க கூடாது. அரசு தொலைகாட்சியான பொதிகை-யில் மட்டுமே, இந்திய பரம்பரையை ஒட்டி நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகின்றன மற்ற தனியார் நிறுவனங்கள், திரைப்படம், திரைப்பட கலைஞர்கள் இவர்களைச் சுற்றியே, பல்வேறு பெயர்களில் நடத்திவருகிறார்கள். சினிமா என்பதும் ஒரு பொழுதுபோக்குதானே, பொழுதுபோக்கே முழுநேரமானால் வாழ்க்கையின் நிலை என்னவாகும்?
சுமார் எண்பது விழுக்காடு கிராமங்களைக் கொண்ட இந்திய நாட்டிற்காக, கிராம முன்னேற்றத்திற்காக (அ) கிராம மக்களைப் பற்றி எந்த நிகழ்ச்சியும் தயாரிப்பதில்லை. இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்து வருவது விவசாயம். விவசாயம் சம்பந்தமாக ஒரு மணிதுளியாவது நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பு செய்கிறார்களா?
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாத நிகழ்ச்சிகள் மூலம் நம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். மெகா தொடர்கள் மூலம் இவர்கள் கூறும் கருத்துக்கள் என்ன? மக்கள் என்ன தெரிந்து கொள்கிறார்கள்? பெரும்பாலான தொடர்கள் 30 நிமிட நேரம் ஒலிப்பரப்பாகும். அதில் விட்டுவிட்டு 15 முதல் 20 நிமிடம் விளம்பரம் மட்டுமே இடம்பெறும். மீதம் உள்ள நேரத்திலும் வஞ்சகம், ஏமாற்று, பேய் பிசாசு போன்றவைற்றை மையமாகக் கொண்ட கட்சிகள், வசனங்கள் இடம்பெறும், சிரிப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும், அடுத்தவர்களைப் புண்படுத்துவதாக இருக்கும்.
உதாரணத்திற்கு ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாகக் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். (இரண்டு மூன்று திரைப்படங்களும் அடங்கும்) ஆனால், சுதந்தரத்தைப் பற்றியோ, நாட்டுக்காக உயிர் மற்றும் உடைமைகளை இழந்த மாவீரர்கள் பற்றியோ ஒரு நிகழ்ச்சிகூட இருக்காது. ஒரே ஒரு படத்தில் நடித்த (வெளிவராத) நடிகை முதல் பிரபலமான நடிக, நடிகைகள் தங்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான(?) நிகழ்ச்சிகளைப் பேட்டி காண்பார்கள். இவர்கள் ஒலிப்பரப்பும் திரைப்படமாவது தேசப்பற்றுள்ள (விடுதலை போராட்டம் பற்றிய) திரைப்படமாக இருக்குமென்றால், அதுவும் கிடையாது. பிறகு எதற்கு சின்னத் திரைகள் அளிக்கும் சதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி?
அண்மைக்காலமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் சமயத்தில், மாநில மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெறும் மாணவஃமாணவிகள் கருத்து இதற்குச் சான்றாக அமையுமென நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்ததால் தான் முழுகவனத்துடன் படிக்க முடிந்ததெனக் கூறுகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பமே தொலைகாட்சியைத் தவிர்த்திருக்கிறார்கள். சின்னத்திரையை ப்பார்க்காததால் மட்டும் முதலிடம் பெற்றார்கள் என்பதல்ல. இதுவும் ஒரு காரணம் அவ்வளவே ஆகவே, சின்னத்திரையை அளவோடு பார்த்து நம் கலாச்சாரத்தைப் பாதுகாத்துச் சிறப்புடன் வாழ்வோமாக.
No comments:
Post a Comment