சட்டத்தால் யுத்தம் செய் _ நூல் மதிப்புரை

சட்டத்தால் யுத்தம் செய் _ நூல் மதிப்புரை


நூல் பெயர்: 
சட்டத்தால் யுத்தம் செய் 

நூல் ஆசிரியர்: 
நீதியரசர் கே சந்துரு (பணி ஓய்வு) 

நூல் வெளியீடு: 
விகடன் பிரசுரம் 

முதல் பதிப்பு _ ஜூலை 2016 
 ஆறாம் பதிப்பு _ டிசம்பர் 2025 
பக்கம் 167 / விலை _ ரூபாய் 240/-

சட்டமும் நீதியும், சாமானிய மக்கள் முதல், சாதனை படைத்த மக்கள் வரை எவ்வாறு அவர்களுடன் பயணிக்கிறது என்பதை விளக்கும் நூல். 

 சட்டத்தின் மூலம் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு அமைகிறது, என்பது தெரியவரும் போது, அதன் உள் அர்த்தம் நம்மை வேறு நிலைக்கு கொண்டு செல்கிறது. 

சட்டம் வேறு. நீதி வேறு. சட்ட மன்றம் வேறு. நீதிமன்றம் வேறு. இப்படி இரண்டுமே ஒன்றுபோல் தோற்றமளித்தாலும், ஒன்றில் இருந்து இன்னொன்று, மாறுபட்டு இருப்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

சட்டத்தை இயற்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் இருக்கிறது. இந்த மன்றங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அன்றைய காலகட்டத்திற்கு தேவையான சட்டங்களை உருவாக்குகிறார்கள். 

சட்டமன்றத்தால் சட்டமாக்கப்பட்டவைகள், நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? மக்களுக்கு பயன்பெறத்தக்க வகையில் உள்ளனவா? என்பதை இருதரப்பு வாதங்கள் மூலம், கேட்ட பிறகு, அவற்றிற்கு தீர்வு கிடைக்கும் இடமாக நீதிமன்றமாக இருந்து வருகிறது. 

"சட்டத்தால் யுத்தம் செய்" என்ற விகடன் பிரசுர நூலின் ஆசிரியர் மாண்புமிகு ஓய்வு பெற்ற நீதியரசர் கே சந்துரு ஆவார்கள். 

நீதியரசர் கே சந்துரு அவர்களுக்கு, அறிமுகம் தேவை இல்லை. தனது பணி ஓய்வு நாளில், எந்தவித விழாவும் எடுத்துக் கொள்ளாமல், தனியாக மின்சார ரயிலில், தன் வீட்டிற்கு பயணம் ஆகி புதிய அத்தியாயம் படைத்தவர். 

167 பக்கங்களை கொண்ட இந்த நூலின் முதற்பதிப்பு ஜூலை 2016 _ ஆம் ஆண்டும், ஆறாம் பதிப்பு டிசம்பர் _ 2025 ஆம் ஆண்டிலும் வெளிவந்திருக்கிறது. 

இந்த நூல், மொத்தம் 31 கட்டுரைகளாக, இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.

 சட்டத்தால் யுத்தம் செய் என்ற முதல் பாகத்தில் உள்ள 17 கட்டுரைகளும், அதுவும் 17 பெண்மணிகளின் துணிச்சலான சட்டப் போராட்டங்கள், அதற்கான நீதிமன்ற நடைமுறை போராட்டம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. 

வழக்கு மன்றத்திற்கு வந்த விசித்திர வழக்குகள் என்ற இரண்டாம் பகுதியில் 14 வழக்குகள் பற்றிய விசித்திர தகவல்கள் மூல ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளது. 

"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்ற வேதவாக்கை தனது தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு, லட்சக்கணக்கான வழக்குகளை தன் பனிக்காலத்தில் முடித்து வைத்திருக்கிறார். இது இவரின் இமாலய சாதனை பட்டியலில் முக்கிய இடம்பெறும் தகவல் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

சட்ட பிரச்சனையோ, நீதிமன்ற பிரச்சனையோ, சாமானிய மக்களுக்குத் தான் இருக்கும் என்ற என்ற நிலை இல்லை.

 முத்தம்மா என்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி திருமணம் ஆகாதவர் என்ற ஒரே காரணத்திற்காக, அவருக்கான பதவியை வழங்க மறுத்துவிட்டது அரசு.

 இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார். அதற்கு அரசு தரப்பில், இவர் திருமணமாகாதவர், வெளிநாட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதில் சிக்கல் இருக்கும். அதனால், இவரை இந்தப் பதவிக்கு நியமிக்க முடியாது என்று கூறுகிறார்கள். 

இந்த பதிலில் இருந்த அறியாமையை நீதிமன்றம் வன்மையாக கண்டித்ததுடன், உடனடியாக அவருக்கு பதவி அளிக்க வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்ற தாக்குதலில், அடுத்த வாய்தா காலத்திற்குள் அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட விரிவான விவரத்தை விவரிக்கிறார். 

அசின் பானு தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க நீதிமன்ற வாசலை தொட்டதற்காக, பழிவாங்கப்பட்டவர். அவரின் போராட்டத்தை இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.

அசின் பானுவின் கணவர் மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்த கடையின் நிலை ஊழியர். அவரின் திடீர் மரணம் காரணமாக அசின் பானுவுக்கு பூங்கா ஊழியர் என்ற கடையின் நிலை பணி, கருணை அடிப்படையில் மாநகராட்சியால் வழங்கப் படுகிறது. 

தன் கணவருடன் குடியிருந்த குடியிருப்பில் இருந்து, அவரை வெளியேற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுகிறார் அசின் பானு. 

நாங்கள் கொடுத்த கருணை பணியில் இருந்து கொண்டு, எங்கள் மீது நீதிமன்றத்திற்கு சென்று தடையை ஆணை பெறுகிறாயா? என்று ஆசின்பானுவை, மாநகராட்சியால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். 

இதற்கிடையில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின் அடிப்படையில், ஆணையருக்கு தண்டனை அறிவித்து, அபராத தொகை விதிக்கப்படுகிறது.

 குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது, அவர்கள் அபராத தொகை கட்டுவது அவமானத்திற்கு உரியதாக கருதப்படும்.

 இந்த நிலையில் இந்த அபராத தொகை அசின் பானுவுக்கு வழங்கப்பட்டதா? என்பதை நீதிமன்றம் தாமாக விசாரிக்கிறது. 

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அபராத தொகையை பெற்றுக் கொண்டால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ? என்ற காரணத்தால், அந்த தொகையை வாங்க மறுக்கிறார்.

 அதனைத் தொடர்ந்து, நீதிமன்றமே நேரில் வரவழைத்து அவருக்கு விவரத்தை கூறி, எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்த தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கடை நிலை பணியாளர்களுக்கும் நீதிமன்றம் துணை நின்றதை விவரிக்கிறார். 

கணவன் மனைவியை விபச்சார தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறையைப் பற்றி பற்றிய விசாரணை விவரத்தை உமாதேவி என்ற கட்டுரையில் விவரிக்கிறார். 

கோயிலுக்கு பூஜை செய்யும் பின்னையக்காள், அவரின் உரிமையை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட நீதிமன்ற போராட்டத்தை "பின்னையக்காள்" என்ற கட்டுரை விவரிக்கிறது. 

காதியின் மகிமை தெரியாத ஒரு பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குனர் கஸ்தூரியை பழிவாங்கிய நடவடிக்கையை உயர்நீதிமன்றம் கண்டித்ததோடு, அபராதம் விதித்த விவரத்தை "கஸ்தூரி" என்ற கட்டுரையில் விவரிக்கிறார். 

மாலதி என்ற காவல்துறையின் முதல் பிரிவு பெண் காவலரின் வேதனை, அவர் சந்தித்த சோதனை அனைத்தும், "மாலதி" என்ற கட்டுரையில் விவரிக்கிறார். 

நீதிமன்றத்தில் கைபேசியை பயன்படுத்தக்கூடாது, என்ற நடைமுறை வந்திருப்பது நமக்குத் தெரியும். அந்த கைபேசியால், துர்கா மூர்த்தி என்ற பெண்மணி எவ்வாறு பாதிக்கப்படுகிறார், அதில் இருந்து எவ்வாறு மீள்கிறார் என்பதை "துர்கா தேவி" என்ற கட்டுரை மூலம் விளக்குகிறார். 

இப்படி போத்துமல்லி, காளித்தாய், அமுதா, முகபத் பிவி, தமிழரசி போன்ற பெண்மணிகள் சந்தித்த வழக்கு விபரங்கள் மற்றும் அதனையும் தாண்டி விசித்திர வழக்குகளையும் விவரமாக எடுத்துரைக்கிறார். 

"சட்டத்தால் யுத்தம் செய்" என்ற தலைப்பு மிகவும் பொருந்தி இருக்கிறது. அதுவும் நீதிமன்றத்திற்கு, ஒரு இரத்தினக் கல்லாக விளங்கிய நீதியரசர் கே சந்துரு அவர்கள் எழுதியிருக்கும், இந்த நூல் படிப்பவர்க்கு பாட நூலாகவும், இதன் மூலம் ஒவ்வொருவரும் அவரவர் உரிமைகளை நிலை நாட்ட உதவும் வழிகாட்டும் நூலாகவும், அமையும் என எடுத்துக் கொள்ளலாம். 

இந்த நூலை படித்தால் தெளிவு பெறலாம், அறிவு பெறலாம், வாழ்க்கையில் வளம் பெறலாம். அவசியம் படித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. 

பொறிஞர் ப நரசிம்மன், 
தமிழியக்கம், தருமபுரி


You may also like

No comments: