காந்த்ருக் _ நூல் மதிப்புரை

காந்த்ருக் _ நூல் மதிப்புரை

நூல் பெயர் _ காந்த்ருக்(கன்னட நாவல்)
நூல் ஆசிரியர் _ சதீஷ் சப்பரிகே ( கன்னடம்)
தமிழில் _  கே நல்லதம்பி 
வெளியீடு _ காலச்சுவடு, நாகர்கோவில் 
முதல் பதிப்பு _ டிசம்பர் 2025
பக்கம் _ 424 / விலை _ ரூபாய் 550/_

காந்த்ருக் என்ற நாவலின் தலைப்பு நம்மை காந்தமாக ஈர்க்கிறது.

கன்னட நாவலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கும், கே நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். தமிழிலிருந்து கன்னடத்திற்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமது பங்களிப்பை அளித்திருப்பவர். 

"காந்த்ருக்" என்ற இந்த நாவல் மொழிபெயர்ப்பு நாவல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல், நம்மை அழைத்துச் செல்லும் எதார்த்தமான நாவலாக அமையப் பெற்றிருக்கிறது.

424 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் படலம் பெசிசஹார் 147 பக்கங்கள் வரையிலும், இரண்டாம் படலமான முக்திநாத் 293 பக்கம் வரையிலும், மூன்றாம் படலமான காந்த்ருக் இறுதிவரை நம்மை இட்டுச் செல்கிறது.

36 வயதான இளைஞன் சித்தார்த்தன் "போக்ரா" வில் இருந்து பிசிஸாராவிற்கு புறப்பட்ட மினி பேருந்தில் பேக் பேக்கையும், ஹைகிங் ஸ்டிக்கையும் எடுத்துக்கொண்டு அன்னபூர்ணையின் மடி சேர புறப்பட்ட பயணிகளுடன் பயணிக்கிறான். 

சித்தார்த்தன் பெங்களூரை விட்டு, தன் வாழ்க்கையே மறந்து, யாருக்கும் தெரியாத அன்னபூர்ணா பள்ளத்தாக்கில் மறைந்து போகும் முடிவில், இந்த பயணத்தை தொடர்கிறான்.

காட்மாண்டுவில் உள்ள "யேதி" எஸ்க்ளூசிவ் ஸ்டோரை தேடி போய், 25 நாட்கள் தங்குவதற்கான ஆடை அணிகலன்கள் வாங்குகிறான். 

காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து, போக்ரா சென்றடைய, புத்தா ஏர்வேஸ் என்று சிறிய விமானத்தில் பயணிக்கிறான். 

சித்தார்த்தனின் அப்பா தர்மராஜா செட்டி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார்.

 அதன் பிறகு இவனுடைய வாழ்க்கை சக்கரம் தலைகீழாக மாறுகிறது. இவனுடைய நிறுவனம் கைத்தவறி செல்கிறது.

 இப்படி ஒன்றன்பின் ஒன்றாக இழந்த பிரம்மச்சாரியான, இவனும் வாழ்வின் மீது எவ்வித பிடிப்பும் இல்லாமல் போக, பிடிவாதமாக புறப்பட்டு செல்கிறான். 

கதை செல்லும் வழியிலேயே சித்தார்த்தனின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், அதன் விளைவுகள் ஒவ்வொன்றும், கதை செல்லும் போக்கிலேயே, சிறிதும் பிசிர் இல்லாமல், பின்னிப் பிணைந்து நம்மை அழைத்து செல்கிறார் தமிழில் மொழிபெயர்த்த நூல் ஆசிரியர் நல்லதம்பி. 

 மருத்துவரின் அறிவுரைப்படி மறுநாள் காலை, ஆஞ்சியோகிராம் தேவையானால் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று சித்தார்த்தனுக்கு தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை கட்டிலில் இருந்த சித்தார்த்தனுக்கு டாக்டர் மிச்சலா மாதவன் அனிஸ்தியா கொடுக்கிறார். 

வலது மணிக்கட்டு ரத்த நாளத்திற்குள் புகுந்த கேதீட்டர், வலது தோளை அடைந்து, திரும்பி மார்பு பாகத்தில் சஞ்சரித்து, மெல்ல இதயத்திற்குள் நுழைகிறது. 

ஒரு தொழிலதிபராக புதிய தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால், ரிஸ்க் எடுக்க வேண்டும், "ரிஸ்க் இருக்கும் இடம் வெற்றி இருக்கும்" என்ற வாசகங்களை நீண்ட சொற்பொழிவாற்றிய ஜீவன், இப்பொழுது ஆப்ரேஷன் தியேட்டரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. 

சித்தார்த்தன் உருவாக்கி இருந்த, "ஜஸ்ட் இன்டலிஜென்ஸ்" நிறுவனத்திற்கு அரசாங்கம் முதலீட்டை தர தயாராக இருந்த இந்த நிலையில், நடக்கும் இந்த ஆபரேஷன், ரகசியமாக நடைபெற்றது. 

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு இடத்தில், தன்னுடைய வேலை தொடர்பான பயணங்களில், பயணித்துக் கொண்டிருந்த சித்தார்த்தன், தனது அப்பா இறந்த பிறகு, அசைந்து அசைந்து நகர்ந்து சென்ற, மினி பேருந்தில், "ஹியூமன் வாச்" தொடங்கி இருக்கிறான். 

மினி பேருந்து பயணத்தில், சோனம் என்ற மலையேற்ற வழிகாட்டி அறிமுகம் ஆகிறார். சித்தார்த்தனுக்கு சோனம் பிடித்து போகிறான். 

நண்பகல் வாக்கில் மினி பேருந்து, பெசிசஹாரா பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 

இந்த மலையற்ற நடை பயணத்தின் வாயிலாக சித்தார்த்தன் என்னும் முப்பத்தாறு வயது இளைஞன், தன்னை அறிந்திட, தன்னை உணர்ந்திட, இந்த உலக பந்தத்தில் இருந்து விடுபட, நண்பர்கள் உறவினர்கள் என அனைத்தையும் துறந்திட, இயற்கையின் பிரமிப்பை தெரிந்திட, அன்னபூர்ணா நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்கிறான். 

இந்தப் பயணத்தின் வாயிலாக, அவன் உச்சத்தை தொட்டிருந்த தொழில் துறை சார்ந்த தகவல்கள், உயிருக்கு உயிரான நண்பர்கள், பாரம்பரியமிக்க பெருமைமிக்க குடும்பத்தின் பெருமைகள், பயணத்தின் போது சந்திக்கும் புதுப்புது நட்புகள், அவர்களின் உறவுகள் என ஒவ்வொன்றும் நம்மை, கதை களத்தோடு அழைத்துச் செல்கின்றன. 

நூலாசிரியரின் கைவண்ணத்தில், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பாராவும், ஒவ்வொரு பக்கமும், நம்மை ஈர்க்கும் வைக்கும் விதமாக, நேரில் நம்மை அழைத்து செல்வது போலவும், கதையல்ல நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையிலான, நேர்த்தியான காட்சி அமைப்புகளை, வரிகளாக்கி நம்மை வருடிச் செல்கிறார். 

கதை களத்தினூடே, அன்பு, ஆசை, நட்பு, துரோகம், காமம் என அனைத்து உணர்வுகளின் பிரதிபலிப்புகளை நயம் பட சித்தார்த்தன் வாழ்க்கையின் வழியில் நடைபெற்ற நிகழ்வுகளின் வாயிலாக, நமக்கு வெளிப்படுத்துகிறார் நூல் ஆசிரியர். 

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவில், இந்த கதை களத்தில் யாருமே இல்லை. ஒருவர் முடிவில் அடுத்தவரை நிர்பந்திக்கும் வன்முறை, இந்த நாவலில் இடம்பெறவில்லை. 

இந்த மலையேற்ற பயணத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலில், இறுதி கட்டத்தை நெருங்கும் போது, சித்தார்த்தனுக்கு நான்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன.

 அந்த நான்கு வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுத்து, அவனுடைய எதிர்காலத்தை அடைய விரும்புகிறான் என்பதுதான் இந்த நாவலின் முடிச்சு. 

இந்த நாவலின் வழியாக பயணிக்கும் சித்தார்த்தன், அவனுடைய நண்பர்கள் பரணிதரன், பாண்டு, மருத்துவர் மிச்சலா மாதவன், மலையேற்ற வழிகாட்டி சோனம், சோஃபியா என ஒருவரையும் நாம் மறந்துவிட முடியாத அளவிலான நபர்களாக, இந்த நாவல் நம்மை இறுகப் பிடித்துக் கொள்கிறது. 

இந்த நாவலைப் படித்து முடித்த பிறகும், இவர்கள் அனைவரும் நம்முடன் கலந்து விடுகிறார்கள். இதுதான் நூலாசிரியரின் வெற்றியாக அமைகிறது. 

வாழ்க்கை, ஆன்மீகம், அமைதி, அன்பு, காமம் என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த நாவல், அனைவரும் படிக்கும் விதமாக அமையப் பெற்றிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் இடம்பெறுகிறது. 

 ப நரசிம்மன்,
 தமிழியக்கம், தருமபுரி
**


You may also like

No comments: