ஒன்றின் மதிப்பு உச்சம்

ஒன்றின் மதிப்பு உச்சம் 


எந்த ஒரு செயல்பாட்டினையும் உடனடியாக செய்யாமல் தள்ளிப் போடும் பழக்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 அதில் இருந்து விடுபடுவதற்காக எவ்வளவோ நினைக்கிறோம், செயல்படுத்த முனைகிறோம், அதனையே நினைத்து நினைத்து அந்த நினைவுகளிலேயே நேரத்தை கழிக்கிறோம்.

 இதை செய்யலாமா? அதை செய்யலாமா? இப்போது செய்யலாமா? இப்படி செய்யலாமா? என்பன போன்ற எண்ண ஓட்டங்களிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம்.

 பல்வேறு விதமான யோசனைகளில், பலவகையான திட்டங்களுடன் செயல்பட நினைக்கிறோம். ஆனால் அந்த நினைப்பு நினைப்பாகவே இருந்து விடுகிறது.

 அதனை போக்கும் விதமாக நிறைய விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய நினைக்க வேண்டாம். இதனை  வலியுறுத்த, ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்யுங்கள் என்றார்கள் நம் முன்னோர்கள்.

 அந்த ஒரு செயலையும் இன்றே செய்ய சொன்னார்கள். இன்று என்று எடுத்துக் கொண்டால், அதில் 24 மணி நேரம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

 இன்று செய்வதை இப்போதே செய்ய வேண்டும் என்பதையும் அதனுடன் சேர்ந்து வலியுறுத்தினார்கள். இன்றைய கணினி யுக, வலைதள, இணைய உலகத்தில், இப்போதே செய்ய வேண்டும் என்பதை விட, இந்த வினாடியில் செய்ய வேண்டும். அந்த வினாடியை கூட மைக்ரோ வினாடியாக மாற்றிவிட்டது இன்றைய தொழில்நுட்ப உலகம்.

 இந்த மைக்ரோ செகண்ட் வேலை நம்மை இன்றைய நவீன உலகில் தக்க வைத்துக் கொள்ள உதவும் காரணியாக உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஆயிரம் பேர்கள் கலந்து கொள்ளும் தேசிய மற்றும் உலக அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தில் வருபவரின், வெற்றியின் கால இடைவெளி மைக்ரோ செகண்ட் என்பதை இங்கு உற்று நோக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

 எந்த செயலை எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்பதை அறிந்தவரால் மட்டுமே இன்றைய அறிவியல் உலகத்தில் தொடர்ந்து நிலை பெற்றிருக்க முடியும்.

 தன் இறையை தேடும் கொக்கு, ஒற்றை காலில் ஓடும் நீரில் தவமிருப்பது போல் நின்று கொண்டிருப்பது, பார்ப்பதற்கு வேடிக்கையாக கூட இருக்கும். ஆனால், அதற்கான இரையை அது கண்டு கொண்ட மைக்ரோ செகண்டில், லபக்கென்று கொத்திக் கொண்டு, தன் இலக்கை நோக்கி செல்வதை இங்கு நினைவு கூற வேண்டும்.

 இயற்கை நமக்கு எல்லா பாடங்களையும் எல்லா நேரங்களிலும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நாம் மிக்க படித்த மேதாவிகள் என்ற நிலையில், அதனை உதாசீனப்படுத்தி கொண்டு நம் உயர்வை நாமே தடை ஏற்படுத்திக் கொண்டு, முன்னேறாமல் பின்தங்கி விடுகிறோம்.

 ஒன்றை இழக்காமல் வேறு ஒன்றை பெற முடியாது. இதுதான் இயற்கை காலம் காலமாக நமக்கு சொல்லிக் கொண்டிருக்கும் பால பாடம். ஆனால், எல்லாமே வேண்டும் என்ற ஆசை பெருக்கு கொண்ட நாம், எதையும் இழக்க தயாராக இல்லை.

 நன்றாக படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆனால், நான் படிக்க மாட்டேன், அதிக மதிப்பெண் வேண்டும் என்று கோயில் கோயிலாக போய்க் கும்பிட்டால் மதிப்பெண் கூடிவிடாது என்பதை உணர வேண்டும்.

 எனக்கு நேரமே இல்லை என்று சொல்லிக்கொண்டு, எதையுமே செய்யாமல் வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் நம்மிடையே உலவி கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

 இந்த உலகத்தில் ஏழை பணக்காரன், இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லோருக்கும் சமமாக கொடுக்கப்பட்டிருக்கும் பொருள், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற அற்புத பொருளாகும்.

 இந்த நேரத்தை சேமிக்கவும் முடியாது. அடுத்தவருக்கு கொடுக்கவும் முடியாது. அடுத்தவரின் நேரத்தை நாமும் பயன்படுத்த முடியாது. நமக்கான நேரம் நமக்கானது தான். சென்ற பொழுதை ஒருகாலும் திரும்பப் பெற முடியாது. எனவே நமக்கான கால நேரத்தை நமக்கான இலக்கை அடையும் வகையில் திறம்பட பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

 மாற்றம் என்பது எங்கிருந்தோ வருவது அல்ல. அவர் நல்லவராக இருந்தால், நானும் நல்ல வராக இருப்பேன், என்பது தவறானது.

 நான் முதலில் நல்ல  செயல்களை செய்வேன். நான் முதலில் ஒரு முன்னுதாரணமாக விளங்குவேன், என்ற வகையில் நாம் செயல்பட வேண்டும். நம் எண்ணங்களை வளப்படுத்த வேண்டும், நம் செயல்பாடுகளை சீர்படுத்த வேண்டும். நம் வாழ்க்கை முறையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 நாம் ஒருவர் மட்டும் மாறினால்! நன்றாக இருந்தால்! எல்லாம் நன்றாகி விடுமா? என்ற கேள்விக்கு இங்கு இடம் இல்லை. 

ஒன்றிலிருந்து தான், 10 ஆகவும், 100 ஆகவும், ஆயிரம் ஆகவும், லட்சமாகவும் பல்கி பெருகுகிறது என்பதை உணர வேண்டும்.

 நாம் மலை உச்சியை அடைய வேண்டும் என்றால், முதலில் மலை அடிவாரத்தை சென்றடைய வேண்டும்.

 பிறகு முதல் படியில் நம் காலை வைக்க வேண்டும். பிறகு அடுத்தடுத்த படிகளை நாம் கடக்கும் போது உச்சியை சென்றடையலாம்.இதுதான் நாம் உணர வேண்டிய பாடம். 

ஒரு நிமிட கால தாமதத்தில் ரயில் பயணத்தை தவறவிட்டவருக்கு தெரியும் நிமிடத்தின் மதிப்பு.

 ஒரு நாள் குறைவாக இருப்பதனால் ஒரு தேர்வில் பங்கு கொள்ள முடியாமல் இருப்பவருக்கு தெரியும் ஒரு நாளின் மதிப்பு.

 ஒரு வினாடியில் தன் வெற்றி வாய்ப்பை இழந்த தடகள வீரருக்கு தெரியும் அந்த வினாடியின் மதிப்பு.

 ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு தெரியும், ஒரு வாக்கின் மதிப்பு.

 ஒன்றுதானே, இந்த ஒன்றால் என்ன மாறிவிடப் போகிறது என்ற மனப்பக்குவத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

 ஒன்றால்தான் உச்சத்தை தொட முடியும் என்று நாம் உணர்ந்தால், அந்த உச்சத்தில் நாம் நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் உணரலாம்.


You may also like

No comments: