Thursday, July 4, 2013

வாழ்க்கைப் படி நூல் வெளியீட்டு விழா

மரு.கி.கூத்தரசன்
செயலர்
தருமபுரித் தமிழ்ச் சங்கம்
தருமபுரி

வாழ்க்கைப் படி நூல் வெளியீட்டு விழா அறிமுக உரை

நண்பர் திரு.ப.நரசிம்மன் அவர்கள் சமுதாய மேம் பாட்டுச் சிந்தனை உள்ளவர். தற்போது நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றும் இவர் பள்ளியில் எஸ்எஸ்ஏ பொறியாளராக பணியாற்றியவர். பள்ளிச் சூழல் இவரது சிந்தனையை பள்ளி சிறார்களுக்கான வழிகாட்டலில் ஈடுபாடு கொள்ளச் செய்துள்ளது. ஒளவையின் ஆத்திச்சூடி வடிவில் எளிமையாக பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப தம் சிந்தனைகளைக் கவிதை வடிவில் எழுதி வாழ்க்கைப் படி என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
உள்ளத்துள்ளது கவிதை, உணர்வெடுப்பது கவிதை என கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் குறிப்பிடுவதற்கிணங்க ஆசிரியரின் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக இந்நூலில் 40 பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஆசிரியரின் சமுதாயப் பார்வை பதிந்திருக்கிறது.
வாழ்க்கைப் படி
வாழ்க்கையைப் படி என்பதற்கும்
வாழ்க்கைக்கான படியாக அமைவது குணங்கள் எனச் சுட்டிக்காட்டுகிறாரா?
வாழ்க்கைக்குத் தேவையானது படிப்பு என்பதைச் சுட்டிக்காட்டுகிறாரா?
படி என்ற சொல் எப்படி அப்படி இப்படி என்பதில் எதை எப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற படிப்பினைகளுக்குரியதாகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் படி படி படி சங்கத் தமிழ் நூலைப் படி அறம்படி பொருள் படி அப்படியே இன்பம் படி
படி.. படி... படி என்ற முதல் பாடல் ஆத்திச்சூடி வடிவில் அமைந்துள்ளது.  கற்றலே வாழ்க்கையின் வெற்றிப் படி என முன்மொழிகின்றார். படிக்கும் முறையையும், படிக்க வேண்டியதையும் ஆசிரியர் வரிசைப் படுத்தி உள்ளார்.
ஆத்திச்சூடி வடிவில் ஒன்றாய் நன்றாய், வாழ வேண்டும், பொன்நாள், நாடு போற்ற வாழ்வாய், நல்ல தம்பி, நல்லொழுக்கம், பார் பார், உயர்ந்திடு பாப்பா, வாழ், வாழ்க்கை, அருட்பெருஞ்சோதி, அன்னை தெரசா, அகல்விளக்கு, ஏகாந்தம், போன்ற கவிதைகள் அமைந்துள்ளன.
தாய்மொழியை அன்பொளி, அகத்தொளி, அருள்ஒளி, இறையொளி எனச் சிறப்பித்து தமிழ் மொழி உலகில் உயர்ந்த செம்மொழி என்றுரைக்கின்றார்.
பாரத நாட்டின் பெருமையையும், தேசியக் கொடி உணர்த்தும் உணர்வினையும், தகடூர் நாட்டின் சிறப்பையும், காவிரியின் பெருமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
பாரத சின்னம் என்ற விதை பொது அறிவிற்கான விளக்கமாக அமைந்துள்ளது.
 இருக்க வேண்டும் கவிதையில்
வஞ்சமில்லா நெஞ்சம் வேண்டும் – தம்பி
குற்றம் பார்க்காமை வேண்டும்
மறதி இல்லாமை வேண்டும் தம்பி
மனதில் துணிவு வேண்டும்.
நல்ல தம்பி கவிதையில்
அனைவரிடமும் அன்பாய் இருப்பாய் தம்பி
ஆணவம் அகன்றிடச் சிறப்பாய்

பார் பார் கவிதையில்
அக்கம் பக்கம் பார்
ஆன்றோர் வாழ்வைப் பார்
ஓங்கி உயரப் பார், ஒளவைப் பாட்டைப் படித்துப் பார்.
வாழ் கவிதையில்
அகிலம் புகழ வாழ் பாப்பா
ஆறறிவு மேம்பட வாழ்
இனியன செய்து வாழ் பாப்பா
ஈவது உயர்வென வாழ்

வாழ்க்கை கவிதையில்
அச்சமில்லா வாழ்வுக்கு தம்பி
ஆசையில்லா மனம் வேண்டும்
இன்பமான வாழ்வுக்கு தம்பி
ஈகை குணம் வேண்டும்
உயரிய வாழ்வுக்கு தம்பி
ஊக்க மனம் வேண்டும்

சுதந்திரம் கவிதையில்
கால்கள் போகும் வழியில்
மனம் போவதன்று சுதந்திரம்
வன்சொல் பேசி எல்லோரையும்
புண்படுத்துவதன்று சுதந்திரம்
இன்சொல் பேசி எளியோரையும்
ஈர்ப்பதே சுதந்திரம்.

குற்றம் இல்லா நெஞ்சம் வேண்டும் கவிதையில்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குற்றம் சொல்லா நெஞ்சும் இல்லை
சுத்தம் பார்க்க மறந்த மக்கள்
சுகத்தை இழந்து வாழும் அவலம்
தென்றல் காற்றை நஞ்சாக்கும் புகைகள்
குடி குடியைக் கெடுக்கும் என்றே
குட்டிக் குட்டியாய் எழுதி வைப்பர்
குடித்துக் குடித்து குடிப்பவர் தள்ளாடுவர்
குடும்பம் தள்ளாடும் குலைந்து போகும்
நாட்டைக் காக்க நாடிட வேண்டும்
வீட்டைக் காக்கம் நெஞ்சம் வேண்டும்.

ஆரோக்கிய உணவு தேவை, விரைவு உணவு விடுதி, குளிர்பானம் போன்ற கவிதைகளை உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு எழுதியுள்ளார்.
மது அருந்துவதும், புகைபிடிப்பதும் தீய பழக்கம் என்று குறிப்பிடும் ஆசிரியர் எவ்வகை என்ற கவிதையில் அறிந்தே தவறு செய்யும் மனிதர்கள் எவ்வகையினர் என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.
வாழ வேண்டும் என்ற கவிதையில்
அன்புள்ளம் அனைவருக்கும் வேண்டும்
ஆசையில்லா மனம் வேண்டும்
இன்சொல்லே பேச வேண்டும்
ஈகை குணமுடன் வாழ வேண்டும்
உழைப்பால் உயர  வேண்டும்
என்ற வரிகள் ஆசிரியரின் உள்ளத்தையும் வாழ்வையும் காட்டுவனவாகும்.

குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கனவு காணுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கனவு மட்டுமே கண்டால் போதாது. கனவினை நனைவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
கனவு கவிதையில்
கனவுகள் நனவாக
கடினமாய் உழைத்திடுவோம்
கனவிலே வாழ்ந்திருந்தால்
கானல்நீராகும் வாழ்க்கை என்று எச்சரிக்கின்றார்.

நாடு போற்ற வாழ்வாய் கவிதையில்
உள்ளத்தில் ஊக்கம் கொள்வாய் - தம்பி
உனக்குள்ள தடைகளை வெல்வாய்
என்றும்;

எண்தமிழ்
ஒன்று ஒன்று ஒன்று
உலகப் பொதுமறை திருக்குறள் ஒன்ற
ஒன்றும் ஒன்றும் இரண்டு
உடலின் கண்கள் இரண்டு


எதிர்நீச்சல் கவிதையில்
நிலையா உலகில் நிலைப்பதற்கே
நிலைக்கப் போடு எதிர்நீச்சல்
ஓடும் ஆற்றில் மீன்கள்
போட்டுத் துள்ளும் எதிர்நீச்சல்
முயற்சி செய்வது எதிர்நீச்சல்
முடியும் போடு எதிர்நீச்சல்
என்றும் தன்னம்பிக்கை ஊட்டுகின்றார்.
ஆசிரியரின் படைப்பார்வத்தைப் போற்றுகிறேன். மேலும் பல சிறந்த படைப்புகளை ஆசிரியர் படைத்து சிறக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

No comments: